கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு... பெங்களூரு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

கர்நாடகாவில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு... பெங்களூரு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் அணிந்து செல்லக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, கர்நாடகாவில் கடந்த 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, பிரீ யுனிவர்சிட்டி மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்லூரிகள், இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, பாகல்கோட், பெங்களூரு, சிக்கபல்லாபுரா, கடக், ஷிமோகா, தும்கூர், மைசூரு, உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா ஆகிய 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ, மாணவிகள் மீண்டும் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

இதனிடையே ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மதியம் 2.30 மணி அளவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடதக்கது.