தவறு ஒரு இடம்....தண்டனை ஒரு இடம்...சரியான நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு...

தவறு ஒரு இடம்....தண்டனை ஒரு இடம்...சரியான நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு...

கர்நாடக பாஜக அரசுக்கு எதிராகவும் ஓலா உபர் நிறுவனங்களுக்கு எதிராகவும் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்.

கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்டோ டாக்சி மூலமாக வாடகைக்கு வழங்கி வரும் ஓலா, உபர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு கட்டண நிர்ணயம் செய்துள்ளது.

சமீப நாட்களாக மாநில அரசிடம் அனுமதி பெறாமல், ஓலா, உபர் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் கட்டணம் அதிகம் உயர்த்தி வசூலித்து வருவதாக புகார் வந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓலா, உபர் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதுடன் கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.

மூன்று நாட்களுக்குள் அரசு வழங்கியுள்ள நோட்டீஸ் க்கு பதில் தரவில்லை என்றால் முழுவதுமாக ஓலா உபர் நிறுவனங்களுக்கு மாநிலம் முழுவதும் செயல்பட தடை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு அதுவரை இந்நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிகிறது . இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்ட பல ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து இன்று பெங்களூரு நகரில் ஜெய நகர் என்ற பகுதியில் உள்ள ஆர் டி ஓ அலுவலகத்தின் எதிரே நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று கூடி பாஜக அரசுக்கு எதிராகவும் ஓலா உபர் நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மத்திய மற்றும் மாநில பாஜக அரசுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நிறுவனங்கள் கொடுக்கும் விதிகளின்படி ஆட்டோ ஓட்டுநர்கள் முறைப்படி செயல்பட்டு வருவதாகவும் விதிகளை மீறி அதிக பணம் வசூலிக்கும் நிறுவனங்களை விட்டு விட்டு வாழ்வாதாரத்திற்காக போராடும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து பாஜக அரசு தங்களுக்கு பெரும் அநீதி இழைத்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓலா உபர் ராபிடோ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அன்றாட வாழ்வாதாரத்திற்கு போராடும் எங்கள் ஆட்டோக்களை பறிமுதல் செய்து தங்களை வஞ்சிப்பதாக ஆட்டோ ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு. 

இதையும் படிக்க:  அமெரிக்க இணையதளங்களை முடக்கிய ரஷ்யா!!