பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு... கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்கள்...

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது வீட்டில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசியல் கட்சி  தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது.

பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு... கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்கள்...

நீலகிரி மாவட்டம், குன்னுார் மலை பகுதியில், நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், பயங்கர விபத்தில் சிக்கியது. இதில், பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 13 பேர்களின் உடல்கள் கோவை சூலூர் விமானபடை தளத்திலிருந்து, நேற்று டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளம் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து ராணுவ மரியாதையுடன் அவர்களது உடல்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டன. பின்னர் தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.  

பாலம் விமானப்படை தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

பிரதமர் மோடியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி செலுத்தினார். மேலும், முப்படைகளின் தளபதிகளும் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு இன்று இறுதிசடங்கு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிபின் ராவத் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் டெல்லி கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரது உடல்கள் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.