எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா? - அதிருப்தியில் வணிகர்கள்!! அதிக பாதிப்பு யாருக்கு?

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 268 ரூபாய்க்கு மேல்  அதிகரித்திருப்பது வணிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா? - அதிருப்தியில் வணிகர்கள்!! அதிக பாதிப்பு யாருக்கு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். தற்போது, உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் 268 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 2 ஆயிரத்து 406 ரூபாயாக விற்கப்படுகிறது. இதனால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் 40 சதவிகித வியாபாரம் குறைந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சிறு தொழில் முனைவோரை கடுமையாக பாதித்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் 9 முறை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி 965 ரூபாய் 50 காசுகளாக தொடர்கிறது.