அதிகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழை... தண்ணீரில் நீந்தியபடி செல்லும் மக்கள்

மகாரஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வாகனங்கள் மிதந்து செல்லும் சூழல் நிலவுகிறது.

அதிகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழை... தண்ணீரில்  நீந்தியபடி செல்லும் மக்கள்

பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மகராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. கரு மேகம் சூழ்ந்து இடைவிடாது கொட்டும் மழையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதேபோல் மகாராஷ்டிராவின் ஜல்கான் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததில் ஜல்கான் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலைகளிலும், வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் மதுராவிலும் பெரு மழையால் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் மக்கள் நீந்தியபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலை சென்ற வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது.