தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை - அமித்ஷா

தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை - அமித்ஷா

திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்  நடைபெற்றது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி, உள்துறை செயலாளர் பிரபாகர், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தென்னிந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழிகள் ஆகியவை இந்தியாவின் பழமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும், தென்னிந்திய மாநிலங்கள் பங்களிப்பு இல்லாத இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய மொழிகளுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தென்னிந்திய மாநில முதலமைச்சர்களின் கூட்ட விவரங்கள், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நமது இளைஞர்களின் வாழ்க்கையையும் திறனையும் போதைப்பொருள் பயன்பாடு அழிக்கும் என்பதால், அவற்றின் அச்சுறுத்தல் மற்றும் பரவலை தடுக்க முதலமைச்சர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, அமித்ஷா தெரிவித்துள்ளார்.