காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா தக்க பதிலடி...

ஐநா பொதுசபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா தக்க பதிலடி...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் உரை நிகழ்த்தி வருகின்றன. அதன்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று ஐநா பொதுசபை கூட்டத்தில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய அவர், மீண்டும் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியதாகவும், இந்திய அரசை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமரின் இச்செயலுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநா சபையில் பேசிய ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி சினேகா துபே, ஐநா பொதுச்சபை தளத்தை பாகிஸ்தான் பிரதமர் தவறாக பயன்படுத்துவதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் சாடினார். இதன் மூலம் உலகின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் பிரதமர் வீணாக முயற்சிப்பதாகவும் இது முதல் முறை அல்ல எனவும் கூறினார். பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியளிக்கும் நாடாக பாகிஸ்தான் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் எனவும் காட்டமாக கூறினார். ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடதக்கது.