கேரளா வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும் - பிரதமர் மோடி!

கேரளா வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும் - பிரதமர் மோடி!

நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான அரசு அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி,  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்டங்களை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரயிலின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். 

அதேபோல், நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை, அறிவியல் டிஜிட்டல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இவை தவிர, மின்மயமாக்கப்பட்ட திண்டுக்கல் - பழனி - பாலக்காடு வழித்தடப் பிரிவினையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

இதையும் படிக்க : வங்காள பறவையை நீர் தூவி வரவேற்ற சென்னை விமான நிலையம்...!

முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடந்த பேரணியல் பேசிய பிரதமர், மத்திய அரசு கூட்டாட்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது எனவும், கேரளா வளர்ந்தால், இந்தியாவும் வேகமாக வளரும் எனவும் தெரிவித்தார். மேலும், கேரளா மாநிலம் படிப்பறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் பெயர் பெற்ற மாநிலம் என்று குறிப்பிட்ட பிரதமர், கடின உழைப்பும் மனிதாபிமானமும் இங்குள்ள மக்களின் அடையாளங்களில் ஒன்றாகும் என கூறினார்.

இந்த விழாவில், கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், முதலமைச்சர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.