கட்டுமான பணிகளில் முறைகேடு... காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார்!!

கட்டுமான பணிகளில் முறைகேடு... காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார்!!

புதுச்சேரி கொஞ்சுங்கிளி மாரியம்மன் கோவிலின் வணிக வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேசுக்கு கடை ஒதுக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

புதுச்சேரியை சேர்ந்த ஜீவரத்தினம் உட்பட 5 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், புதுச்சேரி சண்முகபுரத்தில் உள்ள கொஞ்சுங்கிளி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகளை கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்காக, கொஞ்சுங்கிளி மாரியம்மன் கோவில் என்ற பெயரில் வங்கியில் கடன் பெற்று கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.  மேலும்,  டெண்டர் எதுவும் கோராமல், பல்வேறு முறைகேடுகள் மூலம் தரமற்ற பொருட்களை கொண்டு கட்டப்பட்டுவரும் கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் வணிக வளாகத்தில் கட்டப்படும் 6000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை குத்தகைக்கு பெற தேசியமயமாக்கப்பட்ட வங்கி தயாராக இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கதிர்காமம் தொகுதியின் எம்.எல்.ஏ கே.எஸ்.பி.ரமேஷ்க்கு ஒதுக்க கோவிலின் சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தி என்பவர் செயல்படுவதாகவும், கோவிலின் அன்றாட அலுவல்களை திறம்பட அவர் மேற்பார்வை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவிலுக்கு அருகிலேயே எம்.எல்.ஏ. அலுவலகம் அமைந்துள்ள நிலையில் அதற்கு மாற்றாக கோவில் இடத்தை ஒதுக்கும் நோக்குடன், தான் ஒரு சிறப்பு அதிகாரி என்பதையும் மறந்து சக்ரவர்த்தி செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.  எனவே கட்டுமான பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், கோவில் வணிக வளாகத்தில் கதிர்காமம் எம்.எல்.ஏ.வுக்கு அலுவலகம் ஒதுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தியை பதவியில் இருந்து திரும்ப பெறும்படியும் உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிக்க:  இனி ஆயுதம் ஏந்திய படைக்கான தேர்வை தமிழிலும் எழுதலாம்...!!