சுகாதார துறை அமைச்சர்கள் மாநாட்டில் மன்சுக் மாண்டவியா!!!

சுகாதார துறை அமைச்சர்கள் மாநாட்டில் மன்சுக் மாண்டவியா!!!

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் சுகாதாரத் துறைக்கான நிதியை குறைந்த அளவு மட்டுமே மாநில மற்றும் யூனியன் அரசுகள் பயன்படுத்துவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். 

சுகாதார அமைச்சர்கள் மாநாடு:

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, மற்றும் இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர் என செய்திகள் தெரிவிக்கின்றன.  அனைத்து மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார் என தெரிகிறது. 

மன்சுக் மாண்டவியா:

இந்த ஆலோசனையின் போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் விரிவு படுத்துவதற்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயலாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.  மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான பாடத்தை கற்றுக் கொடுத்திருப்பதாக கூறிய மத்திய அமைச்சர் அனைத்து மக்களுக்குமான சமமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதாரத் துறைக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியை குறைவான அளவு மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளார்.  மேலும் குறைந்த நிதிப் பயன்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக, மாநிலங்கள் செயல்திறனை மேம்படுத்தி, சுகாதாரத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதியை விரைவாகப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் நிதி பயன்பாட்டில் தனி கவனம் செலுத்தி மதிப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

தடுப்பூசி முகாம்:

பொது இடங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் மத்திய அமைச்சர்.  மேலும் நுணுக்கமான திட்டமிடல் மற்றும் அவ்வப்போது ஆய்வு செய்வதன் அடிப்படையில் கொரோனோ தடுப்பூசிகள் காலாவதியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.