தொடர் கனமழையால் ஸ்தம்பித்தது மும்பை... ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடக்கம்...

மும்பையில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25ஆக உயர்ந்துள்ளது.

தொடர் கனமழையால் ஸ்தம்பித்தது மும்பை... ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடக்கம்...
மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
 
இந்த சூழலில் மும்பையில் செம்பூர் மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் கனமழை காரணமாக  நிலச்சரிவு மற்றும் வீட்டின் சுவர் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கிய நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
 
இந்த விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இறந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அரசு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
 
மேலும், வெள்ள சேதங்கள் மற்றும் மீட்புப் பணி குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உத்தவ் தாக்கரே மக்களை காக்க விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், மும்பை மாநகர் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.