உயிர் காக்கும்... உன்னத மனிதர்கள் மருத்துவர்கள்!!

மனித உயிர்களை காப்பாற்றும் அரும்பணியினை சேவை நோக்கத்துடனும், மனிதநேயத்துடனும் மேற்கொண்டு வரும் மருத்துவர்களை போற்றும் விதமாக, இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

உயிர் காக்கும்... உன்னத மனிதர்கள் மருத்துவர்கள்!!

மனித உயிர்களை காப்பாற்றும் அரும்பணியினை சேவை நோக்கத்துடனும், மனிதநேயத்துடனும் மேற்கொண்டு வரும் மருத்துவர்களை போற்றும் விதமாக, இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதனுக்கு முதல் தடவை உயிரைக் கொடுப்பது தாய் என்றால், இரண்டாம் தடவை மட்டுமல்ல மனிதன் உயிருக்காகப் போராடும் ஒவ்வொரு தடவையும், அவனை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழச் செய்வது மருத்துவர்களே! எனவேதான் மருத்துவர்களை வாழும் கடவுள்களாக பாவிக்கிறார்கள், நம் மக்கள். கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்திலும், தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், மக்களின் உயிரைக் காக்கப் போராடி வரும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு இணை இல்லை.

உயிரைக் காவு வாங்க காத்திருக்கும் காலனிடம் இருந்து, மனித உயிர்களை காப்பாற்றும் வல்லமை மருத்துவர்களுக்கு மட்டுமே உண்டு. அத்தகைய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ’தேசிய மருத்துவர்கள் தினம்கொண்டாடப்படுகிறது.

தான் குடியிருந்த வீட்டையே மருத்துவமனைக்காக வழங்கிய இந்திய மருத்துவ மாமேதை பி.சி.ராயின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1ஆம் தேதியே தேசிய மருத்துவர்கள் தினம் என  கொண்டாடப் படுகிறது. பீகாரின் பாங்கிபோர் என்ற ஊரில் பிறந்த பிதான் சந்திர ராய், மருத்துவப் பணிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். மகாத்மா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த பி.சி.ராய், நாட்டு விடுதலைக்காகவும் போராடினார். 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் தலைசிறந்த முதலமைச்சராக பொறுப்பு வகித்த போதும், ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்ததைக் கொண்டே, மருத்துவத்தை அவர் எந்த அளவுக்கு நேசித்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பி.சி.ராயின் நினைவைப் போற்றும் வகையில், இன்றைய சூழலில் மனிதநேயத்துடன் மக்களுக்காக சேவையாற்றி வரும் மருத்துவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு, அவர்களது உணர்வுகளுக்கு  மக்கள் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில், தங்களால் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதை, பெரும் பாக்யமாக கருதி சேவை செய்யும் மருத்துவர்கள், பி.பி.இ. கிட் ஆகியவற்றை அணிந்துகொண்டு, நேரம் காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைக்க கூடியவர்கள்.

சிறந்த சுகாதார பராமரிப்பை வழங்குவதில் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களின் கூட்டுமுயற்சி அடங்கி இருந்தாலும், அவர்களை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக செயல்படும் மருத்துவர்கள் என்றுமே போற்றத்தக்கவர்கள்.