100 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக 100 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமர் கதிசக்தி என்னும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

100 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

பல தசாப்தங்களாக இந்தியாவின் உள்கட்டமையில் நீடித்து வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் கதிசக்தி என்னும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் தனித்தனியாக இயங்கும் பல துறைகளை ஒன்றினைத்து, ஒருங்கிணைந்த திட்டமிடலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அதாவது பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், சாலை அமைக்கப்பட்டவுடன், நிலத்தடி கேபிள்கள், எரிவாயு குழாய் பதித்தல் போன்ற செயல்பாடுகளுக்காக மீண்டும் சாலை தோண்டப்படுகிறது.

இதனால் புதிய சாலை அமைத்ததற்கான பலன் வீணாவதாக குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. இதை சமாளிக்க, அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து செயல்படுவதன் மூலம் சரியான திட்டமிடலை உருவாக்கி, அதன் மூலம் நாட்டில் உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட உள்ளது. அதற்காக 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரதமர் கதிசக்தி என்னும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  

இத்தகைய சிறப்பு மிக்க தேசிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிரகதி மைதானத்தில் அமைய உள்ள புதிய கண்காட்சி வளாகத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.