போலீஸ் காவலில் விசாரணை கைதி உயிரிழப்பு... குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி...

ஏழை குடும்பத்தில் அநீதி நடக்கிறது என்றும், அதனை பார்த்து நாம் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுமா? எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸ் காவலில் விசாரணை கைதி உயிரிழப்பு... குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி...

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜெகதிஷ்புரா காவல் நிலையத்தில் 25 லட்ச ரூபாய் திருடிய குற்றச்சாட்டுக்கு ஆளான அருண், போலீஸ் காவலில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது, முதல் சுங்கச்சாவடியிலேயே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் பிரியங்காவை விடுவித்த போலீசார், 4 பேருடன் அவர் ஆக்ரா செல்ல அனுமதித்தனர். அதன்படி, உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு உள்பட 4 பேருடன், ஆக்ராவுக்கு பிரியங்கா காந்தி சென்றுள்ளார். போலீஸ் காவலில் விசாரணை கைதி பலியான சம்பவத்தில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அருண் வால்மீகியின் குடும்பத்தை தாம் சந்தித்ததாகவும், இந்த நூற்றாண்டில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கு நடக்கும் என தம்மால் நம்ப முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

வால்மீகி சமூகத்தை சேர்ந்த 18 பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ள அவர், தம்மிடம் சொன்ன விஷயங்களை கூட தம்மால் சொல்ல முடியாது என வேதனை தெரிவித்துள்ளார்.

வீடு சூறையாடப்பட்டது என்றும், யாருக்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ள பிரியங்கா காந்தி, ஏழை குடும்பத்தில் அநீதி நடைபெறுவதாகவும், அதனை பார்த்து நாம் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.