பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியதால் பரபரப்பு...

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென விலகியிருப்பது அம்மாநில  அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியதால் பரபரப்பு...

பஞ்சாப்பில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக முன்னாள் முதல்அமைச்சர் அமரிந்தர் சிங் மற்றும்  நவ்ஜோத் சித்து இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இதனை பொதுக்கூட்டங்களில் அவ்வப்போது இருவரும் மறைமுகமாக தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் அமரிந்தரின்  எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சித்து, அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இது கூடுதல் பிளவை ஏற்படுத்த, நவ்ஜோத் சித்து ஆதரவு எம்எல்ஏக்களும் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக  ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விடுத்து போர்க்கொடி பிடித்தனர்.இருப்பினும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலை காரணம்காட்டி, இருவரையும் காங்கிரஸ் தலைமை சமரசம் செய்து வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அண்மையில் அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து பட்டியலினத்தை சேர்ந்தவரும், நவ்ஜோத்துக்கு நெருக்கமானவருமானவருமான  சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். அமரிந்தர் சிங்கிற்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏக்களும், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு,   அமரிந்தர் சிங் இன்று திடீர் பயணமாக  டெல்லி சென்றுள்ளார்.  அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று, தனிப்பட்ட காரணத்திற்காக டெல்லி சென்றுள்ள அமரிந்தர் சிங், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இந்தநிலையில் யாரும் எதிர்பாராதா விதமாக, நவ்ஜோத் சிங் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கியிருப்பது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில், பஞ்சாப்பின் எதிர்கால வளர்ச்சியில் தன்னால் சமரசம் செய்து கொள்ள இயலாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினாலும், கட்சி நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன் என கூறியுள்ளார். இதனிடையே நவ்ஜோத் சிங் ஒரு நிலையற்ற மனிதர் எனவும், அவர் எல்லை மாநிலமான பஞ்சாப்பிற்கு பயனற்றவர் எனவும்   அமரிந்தர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். காங்கிரஸில் அடுத்தடுத்து நிகழும் குழப்பத்தால், அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலில்  அக்கட்சி ஆட்சியை கைப்பற்றுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.