"ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னலே காரணம்" ரயில்வே அமைச்சர் பல்டி! 

"ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னலே காரணம்" ரயில்வே அமைச்சர் பல்டி! 

ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சமிக்ஞைகளே காரணம் என மாநிலங்களவையில் மத்திய மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி நள்ளிரவில் ஒடிசா மாநிலம் பாலேசோர் அருகே மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 295 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ரயில் விபத்திற்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் எனவும், வந்தே பாரத் ரயில் சேவைக்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கிவிட்டு சாதாரண ரயில் சேவையை மத்திய அரசு கைவிடுவதாகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன. மேலும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த இரயில்வே அமைச்சர் இந்த விபத்து ஒரு சதிச் செயல் என்றும் இதுத் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ( ஜூலை-20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், 295 உயிர்களைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சங்சய் சிங் ஆகியோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்த இரயில்வே அமைச்சர், இவ்விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது விசாரணையை முடித்துள்ளதாக கூறினார். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் சர்க்யூட் மாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், அதற்கு பின் 94 ரயில் நிலையங்களில்  இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 201 விபத்து வழக்குகள் துறை ரீதியான விசாரணைக் குழு மூலமும், 18 வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதையும் படிக்க:மணிப்பூர் : பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை...தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!