குடியரசு தலைவரைப் பாராட்டிய ராஜஸ்தான் முதலமைச்சர்:

குடியரசு தலைவரைப் பாராட்டிய ராஜஸ்தான் முதலமைச்சர்:

நாட்டின் 15வது குடியரசு தலைவராக முர்மு இன்று பதவியேற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரஜஸ்தான் முதலமைச்சர் பாராட்டு:

புதிதாக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு தனது முதல் உரையை இன்று ஆற்றினார். அதன் பிறகு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குடியரசு தலைவரை வெகுவாகப் பாராட்டினார். "அவரது பேச்சில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருந்தது. நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்," என்று அசோக் கெலாட் கூறினார். "ஒரு பழங்குடியினப் பெண் கூறிய கருத்துகள் பாராட்டுக்குரியவை. அவர் இன்று தேசத்திற்கு செய்த உறுதிப்பாட்டை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்," என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குடியரசு தலைவர் பதவியேற்றபின் முர்மு உரை:

முர்மு, நாட்டின் உயர்மட்ட அரசியலமைப்பு பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினரும் இரண்டாவது பெண்மணியும் ஆவார். 

விழாவுக்குப் பிறகான உரையில், 64 வயதான முர்மு, ”குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது தனது சொந்த சாதனை மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு ஏழையின் சாதனை” என்றும் கூறினார்.  மேலும், நாட்டின் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அவர்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பை தன்னில் பார்க்க முடியும் என்றும், இது தனக்குப் பெரிய திருப்தியைத் தருவதாகவும் அவர் கூறினார்.

”ஏழை வீட்டில் பிறந்த மகள், தொலைதூர பழங்குடியினர் பகுதியில் பிறந்த மகள், இந்தியாவின் மிக உயரிய அரசியலமைப்பு பதவியை அடைவது நமது ஜனநாயகத்தின் பலம்” என்று அவர் மேலும் கூறினார். "உலகின் நலனுக்கான உணர்வோடு, முழு விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன்" என்றும் முர்மு கூறினார்.

அனைத்து நாட்டு மக்களுக்கும் பணிபுரியும் போது, இளைஞர்கள் மற்றும் இந்தியப் பெண்களின்  நலன்கள் தனக்கு முதன்மையாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.