மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்...!மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தும் முதலமைச்சர்!!

மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்...!மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தும் முதலமைச்சர்!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி 12-வது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தலாம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் உரை:

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோருக்கு பேரவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து துணை நிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, கடந்த கால ஆட்சியை விட தற்போது துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருக்கு இடையேயான அதிகார பகிர்வு மாறி உள்ளது அனைவருக்கும் தெரியும் என்றார். சிறந்த முறையில் புதுச்சேரி மாநிலத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் பேசினார். அப்போது துணைநிலை ஆளுநர் உரையில் உள்ள குறைகளை சட்டமன்ற உறுப்பினர் சுட்டிகாட்டி பேசி கொண்டிருந்தபோது, பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்தை பேசவிடாமல் தொடர்ந்து குறுக்கீடு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரை பேரவையில் பேசவிடாமல், ஜனநாயகத்தை மீறி அநாகரிகமாக நடந்துகொண்ட அமைச்சரை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/india/SUSPENDED-MLA-RAJA-WHAT-IS-THE-REASON

சபையை நான்கு நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தல்:

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு சபையை  மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு ஒத்துழைப்புக் கொடுக்கும்:

இதனையடுத்து, அவையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி 12-வது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தலாம் என  கூறிய அவர், மத்திய அரசு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்றும் அதன் மூலம் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதல்வர் உரைக்கு பின்னர் அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.