பாம்பை விட்டு மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

கேரளாவில் வரதட்சணைக்காக, பாம்பைக் கடிக்க வைத்து, மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாம்பை விட்டு மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த உத்ராவுக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும், கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், வங்கி அதிகாரியான சூரஜ், பத்தனம்திட்டா அரூர் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை, விஷப் பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான போலீசார் விசாரணையில், வரதட்சணைக்காக உத்ராவை கொன்று விட்டதாக சூரஜ் ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை பாம்பை ஏவி கொல்ல நடந்த முயற்சியில், உத்ரா தப்பியதால் இம்முறை தூக்க மாத்திரை கொடுத்து, பின்னர் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றதையும் ஒப்புக்கொண்டார். திருமணத்தின்போது 10 லட்ச ரூபாய் ரொக்கம், 100 சவரன் நகை, சொத்து, கார் போன்றவற்றை வரதட்சணையாக பெற்ற சூரஜ், மேலும் வரதட்சணை பெற முயன்றுள்ளார். அது முடியாமல் போகவே மனைவியை தீர்த்துக்கட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில், சூரஜ் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளதாக கூறிய கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், அவருக்கு 5 லட்ச ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.