ரேஷன் பொருட்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்!

ரேஷன் பொருட்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்!

புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி:

அதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், திங்கட்கிழமை கூட உள்ள புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்,  புதுச்சேரியில் திமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை என்றும், மக்கள் பிரச்சனைகளை பற்றி சட்டமன்றத்தில் பேசமால், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் நெருக்கம் கொண்டு தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்கு எவ்வித பாதகமும் வராமல் பார்த்துகொள்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

 போராட்டம்:

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவதா? அல்லது அரிசிக்கான தொகையை பணமாக வழங்குவதா? என மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமில்லை எனவும், அரசின் கொள்கை முடிவின் படி செயல்பட வேண்டும் என்றும் இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளதாகவும், விரைவில் அரசு ரேஷன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கான பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இல்லையெனில், தலைமை கழகத்தின் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.