கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளக்காடாக காட்சியளிக்கும் உத்தரகாண்ட்  

உத்தரகாண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த இரண்டு நாட்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளக்காடாக காட்சியளிக்கும் உத்தரகாண்ட்   

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நைனிடால் மாவட்டத்தில் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏராளமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர். மேலும் குமான் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளன.பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

அவர்களை அனைவரையும் மீட்கும் பணியில் 10 பேரிட மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். மேலும் விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி விமானம் மூலம் பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘3 ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே  உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி, மழை வெள்ள பாதிப்புக்கள், மீட்பு பணிகளை பற்றி கேட்டறிந்தார். மேலும், தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்தார்.