எடியூரப்பா பதவி பறிக்கப்படுமா..? பாஜக மேலிடம் இன்று முக்கிய முடிவு...

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.க-வில் உட்கட்சி பூசல் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க, எடியூரப்பாவிடம் இருந்து முதலமைச்சர் பதவியை பறிப்பது குறித்து கட்சி மேலிடம் இன்று முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பா பதவி பறிக்கப்படுமா..? பாஜக மேலிடம் இன்று முக்கிய முடிவு...
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த  2019 ஜூலை 26ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக  பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளித்து இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்கிறார்.
 
கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே. பி.நட்டா உள்ளிட்டோரை  சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை  ராஜினாமா செய்யப்போவதாகவும் எடியூரப்பா அறிவித்தார். 
 
 இந்நிலையில், 2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.க்களுக்கு பெங்களூருவில்  இன்று  காலை எடியூரப்பா விருந்து அளிக்கிறார். அதன் பிறகு, கட்சி மேலிடம் உத்தரவிட்டால், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.