முர்மு மற்றும் கர்நாடக பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் புகார்.....

முர்மு மற்றும் கர்நாடக பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் புகார்.....

குடியரசு தலைவர் தேர்தல்  நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் உறுப்பினர்கள் குடியரசு தலைவருக்கான வேட்பாளர் முர்மு மற்றும் பாஜக தலைவர்கள் மீது லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தினர் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

குடியரசு தலைவருக்கான தேர்தலுக்கு முன்தினம் பயிற்சி என்ற பெயரில் பாஜகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் என்றும் அங்கு அவர்களுக்கு ஆடம்பரமான அறைகளும் உணவுகளும் மதுபானங்களும் வழங்கப்பட்டது எனவும் செல்வாக்கு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 18 அன்று வாக்களிக்க வரும் போது  அனைத்து அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் விடுதியில் இருந்து விதான்  சவுதாவுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்தில் வந்தனர் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர்கள் சித்தராமையா, பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் கையெழுத்திட்ட புகார் மனுவை முன்னாள் எம்பி வி.எஸ்.உக்ரப்பா தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணையத்திடம்  அளித்தனர்.

 எம்.எல்.ஏக்களுக்காக நட்சத்திர விடுதி செலவு , உணவு, மதுபானங்கள் மற்றும் பொழுதுபோக்குக்கான பெரிய தொகை உள்ளிட்டவற்றை  முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை செலவழித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசவராஜ் பொம்மை, கர்நாடகா மாநில பாஜக  தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் முதலமைச்சர்  பிஎஸ் எடியூரப்பா, அரசு தலைமைக் கொறடா சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.  முர்முவுக்கு ஆதரவாக பதிவான அனைத்து வாக்குகளும் முறைகேடாக பதிவாகியுள்ளதால்  செல்லாத வாக்குகளாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது .