ஆகஸ்ட் 28, சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு

ஆகஸ்ட் 28, சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். 

அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் செயற்குழு வற்புறுத்திய போதும் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை. இதையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் கீழ் மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவி வரை உள்கட்சி தேர்தலை நடத்துமாறு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். 

சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்தும் அதிருப்தி தலைவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. 

அதன்படி மற்ற பதவிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 ஆம் நாளில் இருந்து செப்டம்பர் 20 ஆம் நாளுக்குள் நடத்தப்படும் என்று செயற்குழு அறிவித்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் அப்பதவியை ஏற்க ஆர்வமில்லாமல் இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நேரு குடும்பத்தை சாராத வேறு நிர்வாகிகளை தலைவர் பதவியில் நியமிக்க முறையான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. இந்த குழப்ப நிலைக்கு முடிவு கட்ட சோனியா காந்தியே தலைவர் பதவி யில் நீடிக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 28 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.