காங்கிரஸின் யூடியூப் சேனல் நீக்கம்… நாசவேலையா? தொழில்நுட்பக் கோளாறா ?

காங்கிரஸின் யூடியூப் சேனல் நீக்கம்… நாசவேலையா? தொழில்நுட்பக் கோளாறா ?

இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, 'இந்திய தேசிய காங்கிரஸ்' என்ற யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று தெரிவித்தது.

யூடியூப் பக்கம் நீக்கம்

எங்கள் யூடியூப் சேனல் ’இந்திய தேசிய காங்கிரஸ்' நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை சரிசெய்து வருகிறோம், மேலும் கூகுள்/யூடியூப் நிறுவனத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம்  என்று காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது என்ன காரணம் என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா என்பதை கண்டறிந்து மீண்டு வருவோம்  என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸின் "இந்திய ஒற்றுமை நடைபயணம்" செப்டம்பர் 7 ஆம் நாள் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு காஷ்மீரில் முடிவடைகிறது.

இந்திய ஒற்றுமை நடைபயணம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மே மாதம் இந்த நடை பயணத்தை அறிவித்தார். ஐந்து மாத நடைபயணத்தில் 3,500 கிலோமீட்டர் பயணம் முழுவதும் 12 மாநிலங்களுக்குள் செல்லப்படும். ஒவ்வொரு நாளும், நடைபயணம் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் பாதயாத்திரைகள், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி  உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தல்கள் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நடைபயணம் கட்சியின் தொண்டர்களை வரவிருக்கும் தேர்தல்களுக்கு உற்சாகப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.