இதுதான் பாராளுமன்ற முறையா?-ஜெய்ராம் ரமேஷ்

இதுதான் பாராளுமன்ற முறையா?-ஜெய்ராம் ரமேஷ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் மாநிலங்களவை பாஜக தலைவர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜூன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பிக்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

மழைக்காலக் கூட்டத்தொடரை அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்துவது குறித்தும் எதிர்க்கட்சி எம்.பிக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  மேலும் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தில், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. மோடி பங்கேற்காததற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கூட்டத்தில் பிரதமர் பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, வழக்கம் போல் பிரதமர் வரவில்லை என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  இது 'அன் பார்லிமென்டரி' இல்லையா என்றும் ரமேஷ் கெள்வி எழுப்பியுள்ளார்.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவடைய உள்ளது.