அமளியில் எதிர்க்கட்சிகள் – முடங்கிய அவை… அடுத்தது என்ன? 

அமளியில் எதிர்க்கட்சிகள் – முடங்கிய அவை… அடுத்தது என்ன? 

விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

 
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் அங்கு கூச்சல் குழப்பம் இருந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


இரண்டாவது நாளாக தொடரும் அமளி:


இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மீண்டும் அவையில் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.


ராகுலுக்கு ஸ்மிருதி கண்டனம்: 


நாடு எதிர் நோக்கி வரும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்காமல் மத்திய அரசு விலகி ஓடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை, நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் மரபுகளை அவமதிப்பதாக குற்றம்சாட்டினார்.  


என்ன செய்தார் ராகுல் காந்தி?:


2004 முதல் 2019 வரை அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருந்த ராகுல், நாடாளுமன்றத்தில்  எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். அமேதி தொகுதியை கைவிட்டு 2019ல் வயநாடு தொகுதியின் எம்.பி ஆனபோதும், அப்போதைய குளிர்கால கூட்டத்தொடரில், அவருடைய வருகை பதிவு 40  சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக இரானி விமர்சனம் செய்தார்.


அமளியை எப்படி சமாளிக்கும் மத்திய அரசு?:


திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரண்டு நாட்களாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. தொடர்ந்து அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் தொடர்ந்து அவை நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.