ராமர் பாலத்துக்கு தேசிய பாரம்பரிய அந்தஸ்து-தொடர்ந்து போராடும் சுப்ரமணிய சுவாமி

ராமர் பாலத்துக்கு தேசிய பாரம்பரிய அந்தஸ்து-தொடர்ந்து போராடும் சுப்ரமணிய சுவாமி

ராமர் பாலத்திற்கு தேசிய பாரம்பரிய அந்தஸ்து வழங்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை ஜூலை 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சேதுசமுத்திர திட்டம் என்றால் என்ன?

சேதுசமுத்திரம் திட்டம் என்பது ராமர் பாலத்தை உடைத்து இந்தியாவின் தெற்கு முனையில் குறுகிய வழித்தடத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. இப்பாலம் ராமரால் வானரப்படையைக் கொண்டு ராவணனின் நாடான இலங்கைக்கு செல்ல கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
சேதுசமுத்திரத் திட்டத்தின்படி, 30 மீட்டர் அகலமும், 12 மீட்டர் ஆழமும், 167 கி.மீ நீளமும் கொண்டதாக கப்பல் வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 31, 2007 அன்று, ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்குத் தடை விதித்தது. 25,000 கோடி மதிப்பிலான திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டது.
ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி தெய்வீக கரத்தால் உருவாக்கப்பட்ட பாறை மற்றும் மணல் மேட்டை அழிக்கும் என்ற அடிப்படையில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையிலான குழுக்கள் இந்த திட்டத்தை எதிர்த்தன.


உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை ஏப்ரல் 6, 2018 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது விசாரணை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலம் சர்ச்சை:

சேதுசமுத்திரத் திட்டத்தை முடிக்க, ராமர் பாலம் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தது. இது அப்போதைய காங்கிரஸ் அரசின் கீழ் நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திட்டத்திற்கு தடை விதித்ததுடன், திட்டத்திற்கான மாற்று வழியை கண்டறியுமாறு அப்போதைய காங்கிரஸ் அரசை கேட்டுக் கொண்டது. சமூக-பொருளாதார தீமைகளை கருத்தில் கொண்டு ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் கப்பல் கால்வாய் திட்டத்திற்கு மற்றொரு வழியை ஆராய தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் அரசாங்கம் பின்னர் கூறியது. அதன்பிறகு இந்த திட்டப்பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

புராண நம்பிக்கையின்படி, ராமர் பாலம் என்பது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ஒரு பாலம் எனவும் இது சீதையை மீட்கவும், ராவணனையும் அவனது ராஜ்யமான இலங்கையையும் தோற்கடிப்பதற்காக ராமர் மற்றும் அவரது வானரப்படையால் கட்டப்பட்டது என வாதிடப்பட்டது.  ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், ராமர் பாலம் ஒரு 'கற்பனை' என்றும் எனவே திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததில் இருந்து இந்தத் திட்டம் குறித்த மிகப்பெரிய அரசியல் சர்ச்சை தொடங்கியது.  இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான காரணங்களைக் கூறி புதிய பிரமாணப் பத்திரத்தை அளித்தது. பின்னர், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டன. 

தேசிய பாரம்பரிய அந்தஸ்து கோரிக்கை:

இப்பிரச்சினைகளைத் தொடர்ந்து பாஜக ராமர் பாலத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரி வருகிறது. மேலும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 

தொடர்ந்து குரல் கொடுத்த சுவாமி: 

ராமர்பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக சுவாமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமி, பல சந்தர்ப்பங்களில் தனது விண்ணப்பத்தின் பட்டியலைக் கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், அவர் வழக்கைக் குறிப்பிட்டு, தனது மனுவை அவசரமாகப் பட்டியலிடக் கோரியிருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வழக்கு விசாரணை: 

ஏப்ரல் 2021 இல், இவ்வழக்கை பட்டியலிட வேண்டி அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வுக்கு சுவாமி கோரியிருந்ததாகவும் அவர் ஏப்ரல் 24, 2021 அன்று நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெறவுள்ளதால், இந்த வழக்கை அடுத்த தலைமை நீதிபதியான என்வி ரமணா அமர்வு விசாரிக்கும் என்றும் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியிருந்தார்.


நீதிபதியின் நிலைப்பாடு:

மிக முக்கியமான வழக்கு என்பதால், கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு கூறியது. இதனையடுத்து, ஜூலை 26 ஆம் தேதி இவ்வழக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.