கலைகட்டும் யூரோ கால்பந்து கோப்பை: 2 கோல்கள் அடித்து ரொனால்டோ அசத்தல்...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

கலைகட்டும் யூரோ கால்பந்து கோப்பை: 2 கோல்கள் அடித்து ரொனால்டோ அசத்தல்...

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் எஃப் பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் களமிறங்கிய போர்ச்சுகல் அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஹங்கேரி அணி சிறப்பான தடுப்பாட்டத்தை கையாண்டது.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் போட்டி 0-0 என சமனில் இருந்தது. இரண்டாவது பாதியின் இறுதியில் போர்ச்சுக்கல் அணி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது. 84ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி ஒரு கோல் அடித்தது. மேலும், போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ 87ஆவது நிமிடம் மற்றும் கூடுதலாக வழங்கப்பட்ட 92ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அசத்தினார்.

இதனால், போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும், யூரோ கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய மற்றொரு போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் 20ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹம்மெல்ஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.