4 போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி...

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

4 போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற 39-வது ஆட்டத்தில், சூப்பர்-12 சுற்றின் குரூப் 1 பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 15 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

இருந்தாலும், டி காக்குடன் ஜோடி சேர்ந்த வாண்டெர் டுசன், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடி காட்டிய வான்டர் டுசனுக்கு, மார்கரம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசி கட்ட ஓவர்களில் இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை புரட்டியெடுத்தனர். இதனால், ஜெட் வேகத்தில் ரன்வேகம் உயர்ந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 26 ரன்னும், மொயீன் அலி 37 ரன்னும், பேர்ஸ்டோவ் ஒரு ரன்னும், மலான் 33 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய லிவிங்ஸ்டோன்-மார்கன் ஜோடி அதிரடியாக ஆடியது. லிவிங்ஸ்டோன் 28 ரன்னில் வெளியேற, மார்கன் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியால், ரன்ரேட் அடிப்படையில் அரை இறுதிக்குள் நுழைய முடியவில்லை.