ஒலிம்பிக் போட்டியில் ஏன் கிரிக்கெட் இல்லை..?

உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறாதது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெடுநாள் சோகமாகவே உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் ஏன் கிரிக்கெட் இல்லை..?

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும் நிலையில், கிரிக்கெட்டை மட்டும் ஒலிம்பிக்கில் சேர்த்தால், கட்டாயம் இந்திய அணி தங்கம் வெல்லும் என்ற பேச்சு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாக காணப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்றாலும் கூட, உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் கிரிக்கெட் உள்ளது. மேலும், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கிரிக்கெட்டின் மீது நாட்டம் செலுத்த தொடங்கியுள்ளன. ஆனாலும்கூட, ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் ஏன் இல்லை? என்ற கேள்வி எழலாம்.

சொல்லப்போனால், முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டும் இடம்பெற்றது என்பது தான் உண்மை. ஆம், 1896ஆம் ஆண்டு கிரீஸின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம்பெற்றது. ஆனால், அப்போது எந்தவொரு நாடும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காததால், முதல் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தாலும், போட்டி நடத்தப்படவில்லை. எனினும், அடுத்ததாக 1900-இல் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில், பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஹாலந்து அணிகள் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்தன.

பின்னர் இறுதி கட்டத்தில் ஹாலந்தும், பெல்ஜியமும் விலகியதால், பிரிட்டனும், பிரான்ஸும் நேரடியாக மோதிய இறுதிப்போட்டியில் பிரிட்டன் அணி வெற்றி வாகை சூடியது. அந்த போட்டியே ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமான கிரிக்கெட் போட்டியாக அமைந்து விட்டது. ஆம், பின்வரும் ஆண்டுகளில் போதுமான அணிகள் பங்கேற்காததால் கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்டனர்.

தற்போதைய நிலவரப்படி உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் கூட, 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது ஒலிம்பிக் போட்டிகள் 16 நாட்களில் நடத்தி முடிக்கப்படுவதே எனலாம். ஏனென்றால், கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு அதிக காலஅவகாசம் தேவைப்படும்.

மேலும், ஒலிம்பிக்கை நடத்தும் நாட்டில் கிரிக்கெட் மைதானங்கள் தேவைப்படும். குறிப்பாக, ஜப்பான், சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட கிரிக்கெட் மைதானங்கள் கிடையாது. அப்படியே புதிதாக கிரிக்கெட் மைதானங்களை அமைத்தாலும்கூட, அவற்றைப் பராமரிக்க அதிக செலவாகும். மேலும், ஒலிம்பிக் முடிந்தவுடன் அங்கு யாரும் விளையாடப் போவதில்லை.

வேண்டுமென்றால் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் மைதானங்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒலிம்பிக்கை நடத்தலாம். ஆனால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்தால் பணம் கொழிக்கும் உள்ளூர் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம் என்பதால், இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை பிற்காலத்தில், கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டால், இந்தியாவிற்கு நிச்சயம் ஒரு மெடல் காத்திருக்கிறது என்பதை மட்டும் மறுக்க இயலாது.