பாதி வழியில் இறக்கி விடப்பட்டதால் மனஉளைச்சல்... பஸ் பயணிக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு... 11 ஆண்டுக்கு பிறகு கிடைத்த நீதி...

பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பஸ் பயணிக்கு 11 ஆண்டுக்கு பின் நீதி கிடைத்துள்ளது.

பாதி வழியில் இறக்கி விடப்பட்டதால் மனஉளைச்சல்... பஸ் பயணிக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு... 11 ஆண்டுக்கு பிறகு கிடைத்த நீதி...

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், பாவேந்தர் சாலையை சேர்ந்தவர் உமாபதி, 45. இவர், கும்பகோணத்தில் இருந்து, சென்னைக்கு தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில், 113 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணம் செய்தார். 

வழியில் டீ சாப்பிடுவதற்கு விக்கிரவாண்டி அருகே, பனையபுரம் என்ற இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின், நான் பஸ்சில் பயணிக்க சென்றபோது பஸ் அங்கிருந்து சென்றிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால், 1 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன், 5,000 ரூபாய் வழக்கு செலவு வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2010ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், போக்குவரத்து கழகம், ஓட்டுனர், நடத்துனர் சேவையில் குறைபாடு உள்ளது. பயணிக்கு, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில், பயணிக்காக, 20 நிமிடங்களுக்கு மேல் பஸ் நிறுத்தப்பட்டிருந்தும் வரவில்லை. இதன்பின்னரே பஸ் சென்னைக்கு புறப்பட்டது. பயணியின் கவனக்குறைவே பயண தடைக்கு காரணம் எனத் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்ய போக்குவரத்து கழகம் கோரியது. கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, நீதித்துறை உறுப்பினர் லதாமகேஷ்வரி பிறப்பித்த தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தார்.

சூழ்நிலைகளை கருத்தில் வைத்து, புகார்தாரருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகமானது. இதனால், இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாய் விரைவு போக்குவரத்து கழகம், ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் சேர்ந்து, பயணிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, உத்தரவிடப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.