ராகுல் காந்தி மேல்முறையீடு மனு தள்ளுபடி: எதிர்ப்பு தெரிவித்த கே.எஸ்.அழகிரி மீது வழக்கு பதிவு.!

ராகுல் காந்தி  மேல்முறையீடு மனு தள்ளுபடி:   எதிர்ப்பு  தெரிவித்த கே.எஸ்.அழகிரி மீது வழக்கு பதிவு.!

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 238 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர், ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் இரும்பு தடுப்புகள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தரையில் அமர்ந்தவாறு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து காவல்துறை வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ-க்கள் அசன் மெளலானா, துரை சந்திரசேகர் மற்றும்  துணைத் தலைவர்கள் உட்பட 238 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க   | “பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவிக்கலாம்” - மல்லை சத்யா கருத்து.