தலைகீழாக நின்று போராட்டம்...அன்பில் மகேஷ் சொல்வது என்ன?

தலைகீழாக நின்று போராட்டம்...அன்பில் மகேஷ் சொல்வது என்ன?

கண்டியூர் பகுதியில் விளை நிலங்கள் அழிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்:

தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியில் முக்கனிகளான மா,பலா,வாழை மற்றும் நெல்,தென்னை,வெற்றிலை சாகுபடிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. ஆனால், இந்த செழிப்பான விளைநிலங்களை அழித்துவிட்டு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

விளைநிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதை கைவிட்டுவிட்டு, ஏற்கனவே திமுக கூறிய வாக்குறுதி படி திருவையாறு பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து, நான்கு நாள் வரை சென்ற போராட்டமானது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையும் படிக்க: ஃபுட்போர்ட் அடித்த மேயர்...சர்ச்சையான வீடியோ...விளக்கமளித்த ப்ரியா!

உண்ணாவிரத போராட்டம்:

இதையடுத்து, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மீண்டும்  இரண்டாவது கட்ட உண்ணாவிரத போராட்டமானது தொடங்கப்பட்டது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தலைகீழாக நின்று  போராடினர். தொடர்ந்து, இன்று மூன்றாவது நாளாகவும் விவசாயிகளின் போராட்டமானது நீடித்து வந்தது.

நல்ல முடிவு எடுக்கப்படும்:

இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்திற்கு சென்று 38 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்டியூர் பகுதியில் விளை நிலங்கள் அழிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பேசினார். திராவிட அரசு எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்கள் சார்ந்த திட்டங்களையே முதலமைச்சர் எடுப்பார். அதிலும்  அவர் எடுக்கும்  திட்டங்களில் விவசாயிகளுக்கு கட்டாயம் முன்னுரிமை வழங்கப்படும். எனவே, விவசாயிகளின் போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் உடன் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.