பணி நேரத்தில் ரகளையில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளர்...! சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ...!

பணி நேரத்தில் ரகளையில் ஈடுபட்ட மருத்துவமனை பணியாளர்...! சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ...!

எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை பணியாளர் விஜய்குமார் என்பவர் பணி நேரத்திலேயே மது போதையில் மருத்துவமனை வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் தற்போது சமுக வளைதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஜயகுமார் பணி நேரத்திலேயே அடிக்கடி மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நோயாளிகள் புகார் தெரிவித்ததன் பேரில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர், விஜய்குமாரை கண்டித்ததால் கடந்த ஒரு மாதமாக பணிக்கு வராமல் இருந்துள்ளார்.  

இதனிடையே இன்று மருத்துவமனைக்கு வந்த விஜயகுமார், மது போதையில் மருத்துவமனை வளாகத்திலும், நோயாளிகள் இடத்திலும் ரகளையில் ஈடுபட்டு வந்த இச்சம்பவத்தை அங்கு உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். 

இது குறித்து எடப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, விஜய்குமார் கடந்த ஒரு மாதமாக பணிக்கு வருவதில்லை எனவும், இது சம்மந்தமாக மாவட்ட மருந்துவ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இன்று எடப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு  வந்த விஜய்குமாரை காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றியதாக கூறினார். 

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அரசு மருத்துவமனையில் இதேபோன்று மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த விஜயகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை பணியாளரே மருத்துவமனை வளாகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.