பணிசுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றவர் ஓமனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டார்

பணிசுமை காரணமாக ஓமன் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, தமிழகம் அழைத்து வந்ததற்காக அவரின் குடும்பத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

பணிசுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றவர் ஓமனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டார்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்பாபு. இவர் ஓமன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிக பணிச்சுமையை கொடுத்து அதற்கான ஊதியம் தராமல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது,

இதனால் மனமுடைந்த அவர் தங்கி இருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த தினேஷ்பாபு ஓமன் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையறிந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை தாயகம் அழைத்து வர வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில் தமிழக அரசு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆணையம் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் அவரை மீட்டு இன்று சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர் தினேஷ்பாபுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 108 அவசர ஊர்தி மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.