சப்பாத்தியில் ஊர்ந்த பூச்சி; உணவகத்திற்கு சீல்!

சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

ஈரோடு திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். துரித உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசவத்திற்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு ஜீவானந்தம், ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவி மற்றும் தாயாருக்கு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 3 சப்பாத்தி பார்சல் வாங்கி கொண்டு சென்றார்.  பின்னர் பார்சலை திறந்தபோது சப்பாத்தியில் இருந்து பூச்சி ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 

இதைத்தொடர்ந்து அவர், உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஓட்டல் நிர்வாகத்தினர் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

எனினும் ஜீவானந்தம் இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலும் சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்து சென்றதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலின் சமையல் அறை சரிவர பராமரிக்கப்படாமலும், போதுமான சுகாதாரம் இல்லாமலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டலை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். குறைகளை நிவர்த்தி செய்த பிறகு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஓட்டல் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்