ஆண்களுக்கான வினோத திருவிழா கொண்டாடும் கிராமம்:

விவசாயம் செழித்து, நீர்நிலைகள் பெருக வேண்டி ஆண்கள் மட்டும் கொண்டாடும் வினோத திருவிழா மேலூர் அருகே கொண்டாடப்பட்டது.

ஆண்களுக்கான வினோத திருவிழா கொண்டாடும் கிராமம்:

மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழித்து, நீர்நிலைகள் பெருக வேண்டி ஆண்கள் மட்டும் கொண்டாடும் வினோத திருவிழாவில், 70க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு, மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி அக்கிராம மக்கள் வழிபட்டனர்.

விவசாயம் செழிக்க:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீரசூடாமணிப்பட்டி உள்ளது. இங்குள்ள பெரிய கண் மாய் பகுதியிலுள்ள ஐந்து முழியம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் விழா நடத்தப்படும். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள கருங்காலக்குடி, சுந்தராஜபுரம், மற்றும் வீரசூடாமணிப்பட்டியைச் சேர்ந்த 5 கரை பொதுமக்கள் இணைந்து, விவசாயம் செழிக்க, மழை வர வேண்டியும், நீர்நிலைகள் பெருக வேண்டியும், பழமையான தங்களது பாரம்பரிய முறையில் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இதற்காக கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் 70க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு, பாரம்பரிய முறையில் தோலுடன் தீயில் வாட்டி, அப்படியே சிறு துண்டுகளாக வெட்டி, மண்பானையில் வெறும் வேப்பிலை, உப்பு, மற்றும் தண்ணீர் மட்டும் சேர்த்து வேக வைக்கப்படுகிறது. பின், கடவுளுக்கு படையலிட்டு, இந்த வினோத வழிபாடு நடத்தப்படுகின்றது.

பெண்கள் அனுமதியில்லை:

இந்த திருவிழாவின் சிறப்பே, வழிபாட்டின் போது பெண்கள் யாரும் கலந்துக்கொள்வதில்லை. இதனைத் தொடர்ந்து கடவுளுக்கு படைக்கப்பட்ட இறைச்சியை பொதுமக்களுக்கும், நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஊர் நம்பிக்கை:

இந்த திருவிழாவிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்ளும் நிலையில், தங்களது முன்னோர்கள் நினைவாகவும், அவர்கள் கடைபிடித்த பாராம்பரிய முறைப்படியும் பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டின் காரணமாக, இப்பகுதியில்  மழை பொழிந்து, நீர்நிலைகள் பெருகி, விவசாயம் செழிப்பதுடன், கிராம மக்கள் ஒற்றுமையோடு வாழ்வதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.