பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு...

இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு...

அதிமுக செயற்குழு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைப்பெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என சுமார் 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல், வேதா நிலையம் மேல்முறையீடு தொடர்பாக இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழிகாட்டு குழு, சசிகலா சேர்க்கை ஆகியவற்றால் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டதோடு, அன்வர் ராஜா, சி. வி.சண்முகம் இடையேயான மோதல் அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், நடைப்பெறும் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி, புதிய அவைத்தலைவர் நியமனம், அதிமுக உட்கட்சி தேர்தல் அறி விப்பு, கட்சியில் இருந்து விலகி பாஜக வில் இணைந்த மாணிக்கம் வழிகாட்டு உறுப்பினர் என்பதால் அவருக்கு பதிலாக யாரை நியமனம் செய்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல், அதிமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.