லீக்காகும் கட்சி சண்டை சீக்ரேட்ஸ்: கூட்டத்திற்கு செல்போன் எடுத்து வர தடை விதித்த அதிமுக தலைமை ?...

இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் செல்போன் எடுத்து வர நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை தடை விதி்த்துள்ளது.

லீக்காகும் கட்சி சண்டை சீக்ரேட்ஸ்: கூட்டத்திற்கு செல்போன்  எடுத்து வர  தடை விதித்த அதிமுக தலைமை ?...

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் கட்சியில் நிர்வாகிகள் யாரும் செல்போனை உள்ளே கொண்டு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளுக்கு இடையே கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பல்வேறு நிர்வாகிகள். இந்த கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வந்தன.  

அதோடு முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சசிகலாவிற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியதாகவும், இதையடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவரை அடிக்க பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதில் அன்வர் ராஜாவின் போன் கால் ஆடியோ குறித்து சில விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. 


 இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டு இருக்கிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பேசினாலே கட்சியில் இருந்து நீக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு  நிர்வாகிகள் கொதித்து போய் உள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதாவது இரட்டை தலைமையை எதிர்க்கும் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலர் இன்று செயற்குழு கூட்டத்தில் கடுமையான வாதங்களை வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

 சசிகலாவை மீண்டும் கொண்டு வருவது குறித்து சில தென் மாவட்ட நிர்வாகிகள் குரல் எழுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அன்வர் ராஜாவை நீக்கியதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதை எடப்பாடி கேம்ப்பும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. இதனால் இன்று அதிமுக கூட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை தலைமை, மாநகராட்சி, நகராட்சி தேர்தல், கொங்கில் திமுக செலுத்தும் கவனம், அன்வர் ராஜா நீக்கம், வேதா நினைவு இல்ல வழக்கு, சசிகலாவின் மூவ்கள், உட்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து இன்று ஆலோசனைகள் செய்யப்பட உள்ளதால் நிர்வாகிகளுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக கடும் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் இன்று நடக்கும் ஆலோசனையில் பெரிய அளவில் மோதல்கள் வரலாம் என்கிறார்கள்.  இதனை கருத்தில் கொண்டே அதிமுக கூட்டத்தில் செல்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த கூட்டம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் தகவல்கள் எளிதாக வெளியே சென்றுவிட்டது. நிர்வாகிகள் மோதல் வெளிப்படையாக வெளியே தெரிந்தது.

இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தின் ஆலோசனைகள் இப்படி வெளியே லீக்கானால் அது பெரிய பிரச்சனை ஆகும் என்று அதிமுக டாப் தலைவர்கள் கருதுகிறார்கள். கடந்த கூட்டங்களில் நடந்த விஷயங்களை எல்லாம் பலர் லீக் செய்துள்ளனர். இது யார் என்று தெரியவில்லை. அதேபோல் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களும் லீக் ஆகிவிட கூடாது. அது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

இது உயர் மட்ட அளவிலான மீட்டிங். இதனால் ஆலோசனை செய்யப்பட்ட விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த கூட்டத்தில் செல்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் உள்ளே வரலாம் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.