இரண்டு தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.... இபிஎஸ் நம்பிக்கை!!

இரண்டு தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.... இபிஎஸ் நம்பிக்கை!!

திமுக ஒரு குடும்பக்கட்சி என விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் என தெரிவித்துள்ளார். 

சேலம் சென்ற எடப்பாடி:
 
பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் சென்றடைந்தார். இந்நிலையில் விழுப்புர மாவட்ட செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி வி சண்முகம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கனவை நனவாக்க:

அப்போது அதிமுக தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுவேன் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து  எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்று கூறினார்.

யார் சீண்டினாலும் :

அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து  போவார்கள் என்றும் அதிமுகவை அழிக்க நினைப்பது  கானல் நீராக முடியும் என்றும் கூறினார்.  அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, உளூந்தூர்பேட்டை திருநாவலூர் ஒன்றிய அம்மா பேரவை சார்பில் தொண்டர்கள் மலர்களை தூவியும் ரோஜாமாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கல்வெட்டை..:

அதன்பின் சேலம் மாவட்டம் தலைவாசல் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனை அடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்பு வைக்கப்பட்ட பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற கல்வெட்டை திறந்து வைத்தார். 

என்றும் தொண்டனாக:

அதனைதொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு என்றும் தொண்டனாக இருந்து செயல்படுவேன் என தெரிவித்தார்.  மேலும் அதிமுக எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்கும் கட்சி என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி,  திமுக கட்சிஒரு கார்பரேட் கட்சி என சாடினார். 

மேலும் அந்த கார்பரேட் கம்பெனிக்கு ஸ்டாலின் தான் தலைவர் எனவும்,  கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதலாளிகள் எனவும் விமர்சித்தார். 

முடக்கிய திமுக:

அதனை தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கியதாகவும், மீண்டும் ஆட்சி வந்தவுடன் அந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரவும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் ஒரே தேர்தல் ஒரே நாடு என்று வந்தால் இரண்டு தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் எனவும் கூறினார். 

இதையும் படிக்க:    இந்தியை திணிக்க முயல்கிறாரா அண்ணாமலை....!!