ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் - முரசொலி நாளிதழ்!

ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள் - முரசொலி நாளிதழ்!

ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை விமர்சித்து முரசொலி நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரை தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றோ அர்த்தம் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் என்பவர் யாராலும் தேர்ந்தெடுக்கப் படுபவர் அல்ல. 

சும்மா இருப்பவர்களை திருப்திப்படுத்த மத்திய அரசாங்கம் தருகின்ற டம்மி மரியாதை ஆகும். ராஜா வேஷம் போட்டவர் ராஜாவாக நினைத்துக் கொள்வது மாதிரி - ஆளுநர் ரவி தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி விவகாரத்தைக் கூட அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை எத்தனை நாட்கள் ஊறுகாய்ப் பானையில் போட்டு ஊற வைப்பது போல கிண்டி மாளிகையில் போட்டு மூடி வைத்திருந்தார் ஆர்.என்.ரவி. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி நடத்தும் கம்பெனிகளை அவர் அழைத்துப் பேசியது சமூக ஊடகங்களில் வெளியானது. மகா யோக்கியர் இதுவரை அதற்கு ஏதாவது பதில் அளித்துள்ளாரா  என்றால் இல்லை.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் முடிவு சரியானது, இருப்பினும் சட்டப்படி...அன்புமணி விளக்கம்!

தினந்தோறும் யாருக்காவது அறிவுரை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு  அனுமதி தராமல் இழுத்தடித்ததால் இடைப்பட்ட காலத்தில் 40 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். இது ஆளுநரின் பிடிவாதத்துக்கு கிடைத்த பலிகள் ஆகும். இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியது யார்? நீட் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்ன பதில் கடிதம் எழுதினார்களோ, அதையே தான் இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞர்களும் வழிமொழிந்துள்ளார்கள். இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடுகளும் தலையங்கமாகத் தீட்டி இருக்கின்றன, இவ்வாறு முரசொலி நாளிதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.