ஊரடங்கு தளர்வுக்கு பின் கோவில்களில் பக்தர்களின் கூட்டம்... உண்டியல்களில் குவியும் காணிக்கைகள்...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் திருத்தணி முருகன் கோவில்களில் தலா 79 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு பின் கோவில்களில் பக்தர்களின் கூட்டம்... உண்டியல்களில் குவியும் காணிக்கைகள்...
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது. மாதம்தோறும் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலமலையை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே 5-ம்தேதி திறக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்பு நடைபெற்ற இந்த எண்ணிக்கையில், 79 லட்சத்து 74 ஆயிரத்து 868 ரூபாய் ரொக்கமாக பெறப்பட்டுள்ளது என்றும், 354 கிராம் தங்கம், 502 கிராம் வெள்ளி நகைகள் பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. 
 
இதேபோல் திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக  79 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளனர். தமிழ்க்கடவுள் முருகனின் 5ஆம் படை வீடான திருத்தணி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதில், 79 லட்சத்து 19 ஆயிரத்து 155 ரூபாய் ரொக்கமாகவும், 675 கிராம் தங்கம் மற்றும் 6245 கிராம் வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என தெரியவந்தது.