ரயில்களில், மாற்றுத்திறனாளி இருக்கையை சாதாரண பயணிகள் ஆக்கிரமித்தால் நடவடிக்கை!!

மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் மேலும் 17 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை செயல்படுத்த உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை கோட்டம் ரயில்வே அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, "ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நிசான் நிறுவனம் ரயில்வே உடன் இணைந்து செயல்படுத்தி உள்ள நிலையில், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 17 ரயில் நிலையங்களை மூன்றாவது கட்டமாக மேம்படுத்த உள்ளது. இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ரயில் நிலையங்களை உருவாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் இனி வரும் காலங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளது. ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள், இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிப்பதாக புகார் வருகின்றன. இதன் அடிப்படையில் இன்று முதல் ஒருவார காலத்திற்கு மாற்றுத்திறனாளி பெட்டி மற்றும் இருக்கைகளை சாதாரண பயணிகள் ஆக்கிரமிக்கின்றனர் என்பதை கண்காணிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வில் சாதாரண பயணிகள் பயன்படுத்துவது கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "சென்னை கடற்கரை எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி முழு வேகத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் எந்த குறைபாடும் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நான்காவது வழிதடப் பணிகள் நிறைவடையும்" எனவும் தெரிவித்துள்ளார்.