விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி போட்டோ இல்லை... தென்காசியில் பா.ஜ.க.வினர் போராட்டம்...

தென்காசியில் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாததை கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி போட்டோ இல்லை...  தென்காசியில் பா.ஜ.க.வினர் போராட்டம்...

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில், நோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வகையில் மத்தியரசு மூலம் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் நேற்று 9 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்களில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது படங்கள் இடம் பெற்று இருந்தது. 

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பா.ஜ.க.வினர் தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு இலவசமாக மத்திய அரசு வழங்கி வரும் நிலையில் விளம்பர பேனரில் பாரதப் பிரதமர் மோடியின் போட்டோ ஏன் வைக்கவில்லை என்றுக் கூறி தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு மண்டல பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்த நடத்தினர். அப்போது நகராட்சி அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டு இருந்த தடுப்பூசி முகாம் விளம்பர பேனரை நகராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். இதனால் ஊழியர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அலுவலக வாயிலில் இருந்த போர்ட்டில் பிரதமர் மோடியின் போட்டோவை பா.ஜ.க.வினர் ஒட்டினர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் போலீசார் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். பா.ஜ.க.வின் போராட்டத்தினால் நகராட்சி அலுவலகம் முன்பு 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.