சேகரித்த குப்பையை கொட்ட சென்ற இடத்தில், தூய்மை பணியாளருக்கு நேர்ந்த விபரீதம்!

சேகரித்த குப்பையை கொட்ட சென்ற இடத்தில், தூய்மை பணியாளருக்கு நேர்ந்த விபரீதம்!

நாகை நகர பகுதியில் சேகரித்த குப்பையை கொட்ட வந்த வண்டியில், மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகூர் அம்பேத்கர் நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் விஜய் (26). இவரது மனைவி மஞ்சு .இத்தம்பதியினருக்கு 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். விஜய், நாகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், விஜய் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு சென்றுள்ளார்.  நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில், மற்ற தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை சேகரித்துள்ளார். குப்பை ஏற்றும் வாகனத்தில் குப்பைகளை அள்ளிக் கொண்டு நாகை கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் டிப்பர் லாரி மூலம் குப்பையை கொட்டுவதற்காக சென்றுள்ளார் . இவருடன் ஜோதி என்பவரும் லாரியை ஒட்டிச் சென்றுள்ளார். 

குப்பை கிடங்கில், குப்பையை கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது, மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் வாகனத்தின் மேல் பகுதி உரசியுள்ளது. இதனால், மின்சாரம் வாகனத்தில் பாய்ந்து, வாகனத்தின் மேல் கை வைத்துக்கொண்டிருந்த விஜயை தாக்கியுள்ளது. மின்சாரம் தாக்கியதையடுத்து விஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஜோதியும் படுகாயம் அடைந்துள்ளார். 

பின்னர், அங்கு வந்த காவலர்கள் ஜோதியை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிரிழந்த விஜயை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவமறிந்து மருத்துவமனைக்கு வந்த விஜயின் உறவினர் மற்றும் சக தூய்மை பணியாளர்கள், நாகை அரசு மருத்துவ கல்லூரியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயின் மனைவி, விஜயின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது. தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பில் யாரும் கவனம் செலுத்துவதில்லை எனவும், இது போல் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் போவது  வேதனையளிக்கின்றது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அண்ணன் மோசடி செய்ததால், தம்பியை கடத்திய மர்ம நபர்கள்!