2.5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன... 

புனேவில் இருந்து கூடுதலாக இரண்டரை லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

2.5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன... 

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க, தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. 

அதன்படி தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 15 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று புனேவில் இருந்து 21 பெட்டிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 345 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

இதனை தமிழக சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இந்த தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.