அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல.... செல்லூர் ராஜூ!!

அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல.... செல்லூர் ராஜூ!!

நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் எனவும் அண்ணாமலையின் வாக்கு எங்களுக்கு வேதவாக்கு இல்லை எனவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசுகையில்,

மக்கள் வருத்தம்:

எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுகவுக்கு கிடைத்த அருமையான தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் எனவும் அதிமுகவினர் அவரை பல வடிவங்களில் ரசிக்கிறார்கள் எனவும் எடப்பாடி மீண்டும் முதல்வராகவில்லையே என மக்கள் வருத்தப்படுகிறார்கள் எனவுஇம் பேசினார்.

வேத வாக்கு அல்ல:

மேலும் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரவேற்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கிறது எனக் கூறிய அவரிடம் அதிமுக பாஜக கூட்டணி இறுதி உறுதி என சொல்ல முடியாது என அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை அவருடைய கருத்தை சொல்லி உள்ளார் எனவும் தன் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசியுள்ளார் எனவும் கூறியதோடு அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல எனவும் எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் வாக்கே வேதவாக்கு எனவும் தெரிவித்தார்.

காலம் உள்ளது:

அதனைத் தொடர்ந்து, 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என எல்.முருகன் அண்ணாமலை பேசியுள்ளது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு  இன்னும் எவ்வளவோ காலம் உள்ளது எனவும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் இடங்கள் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நடைபெறும் நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்தார்.

மக்கள் கவனிக்கிறார்கள்:

தொடந்து பேசிய அவர் சட்டமன்றத்தில் பேசும்போது தனது பேச்சினை கேலி செய்வதை பார்க்க வேண்டியது இல்லை எனவும் ஆனால், அதன் மூலம் மதுரையில் பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது எனவும் கூறினார்.  மேலும் மருத்துவ வசதியில் சென்னைக்கு அடுத்த கட்டமாக மதுரையில் மருத்துவ வசதி உள்ளது எனவும் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக இதனை கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்ன செய்துள்ளார் என்பதை மக்கள் பார்த்துள்ளனர் எனவும் நடிகரை அழைத்து வந்து மக்களை வெயிலில் காக்க வைத்ததை மக்கள் பார்த்து வருகின்றனர் எனவும் சு. வெங்கடேசன் நடிகர்களை அழைத்து வந்து சீன் காட்டுகிறார் எனவும் பேசினார்.

நயினார் குறித்து:

மேலும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வருத்தம் என எந்த சூழ்நிலையில் பேசினார் என தெரியவில்லை எனவும் அவர் தோழமைக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எனவே அவரை அழைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் எனத் தெரிவித்த செல்லூர் ராஜூ அவர் அதிமுக இந்தக்கட்சியில் உழைத்தவர் எனவும் கட்சி அவருக்கு உரியதை செய்துள்ளது எனவும் அவர் நன்றி உணர்வோடு பேசியுள்ளார் எனவும் கூறினார்.

இதையும் படிக்க:    ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாடு....!!