விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு  நீர்நிலைகளை தூர்வாரியதில் முறைகேடு குறித்து விசாரணைக் குழுஅமைத்து விசாரிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், லட்சக்கணக்கிலான ஏக்கர் வயல்கள், நீரில் மூழ்கின. பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்த நிலையில், பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு சென்றார்.

காலை கடலூர் மாவட்டத்திற்குச் சென்ற அவர், அரங்கமங்கலம், அடூர் அகரம் ஆகிய கிராமங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்தார்.  இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இருக்கூர், தரங்கம்பாடி ஆகிய பகுதியில் வெள்ளநீரில் மூழ்கிய பயிர்களை ஆய்வு செய்தார்.  

இதையடுத்து, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்தாண்டு  நீர்நிலைகளை தூர்வாரியதில் முறைகேடு குறித்து விசாரணைக் குழுஅமைத்து விசாரிக்கப்படும் என உறுதியளித்தார்.

இறுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயிர் சேதங்கள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.