அரசு பேருந்து ஓட்டுநர் - ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம்...! போக்குவரத்தை நிறுத்திய ஊழியர்கள்...!

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை, ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதால் பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்....

அரசு பேருந்து ஓட்டுநர் - ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம்...!  போக்குவரத்தை நிறுத்திய ஊழியர்கள்...!

காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனைகள் மூன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு அதிகாலை முதல் இயக்கப்படுகிறது.

அந்தவகையில் ஓரிக்கை பணிமனை - 2 விருந்து தாம்பரம் செல்லும் பேருந்து ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துனர் உமாபதி பணிமனையில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வெளியே, தவறான எதிர்திசையில் பேருந்துக்கு முன்பாக வந்து ஆட்டோவை நிறுத்தி பயணிகளை
இறக்கி விட்டுக்கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் மற்றொரு பேருந்து நடத்துனர் தனஞ்செயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சுரேஷ் என்பவரை ஆட்டோ ஓட்டுனர் புல்லட் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளனர். அதனால் ஓட்டுநருக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.